புதுடில்லி: ஆப்ரிக்க நாடுகளில் Ebola வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், டில்லியில் நடைபெற இருந்த இந்தியா-ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் நோக்கில் India-Africa Forum Summit அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2008, 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் உச்சி மாநாடுகள் நடைபெற்றன.
11 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கூட்டமைப்பின் நான்காவது மாநாட்டை வரும் 28 முதல் 31ம் தேதி வரை டில்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற இருந்தன.
இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை World Health Organization சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, மாநாட்டை நடத்துவது குறித்து ஆப்ரிக்க யூனியன் தலைவர் மற்றும் ஆப்ரிக்க யூனியன் கமிஷனுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, டில்லியில் நடைபெற இருந்த இந்தியா-ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டிற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
