சென்னை: மதம் மாற்றப்பட்டு திருமண வாக்குறுதியால் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்த பெண்ணின் ஆதரவாளர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சுகன்யா (33), சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சென்னை வந்துள்ளார். வடபழனியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பணியாற்றியபோது, அதே வளாகத்தில் வேலை செய்த சூளைமேடை பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அது காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணம் நடைபெற வேண்டுமெனில் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என சையது இப்ராஹிம் வற்புறுத்தியதாகவும், அதன்பேரில் சுகன்யா மதம் மாறி “சபா மரியம்” என பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் அவருடன் தொடர்பை துண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சையது இப்ராஹிம் பின்னர் தன்னை தவிர்த்து வந்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக அறிந்த சுகன்யா, கடந்த 6ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்திலும், பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற சுகன்யா மற்றும் அவரது நண்பர்கள், தமக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி, சுகன்யாவுக்கு ஆதரவாக வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், எதிர்ப்பு தெரிவித்த ஒருவரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.
