சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
புதுடில்லி: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் கண்டறிந்து வெளியேற்ற அரசு உறுதியுடன் செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற Border Security Force நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கையாக மக்கள்தொகை மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சட்டவிரோத ஊடுருவல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். இதுபோன்ற சட்டவிரோத குடியேற்றங்களை கண்டறிந்து வெளியேற்றுவது அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்றார்.
மேலும், இந்தியாவின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டுக்குள் “ஸ்மார்ட் எல்லை திட்டம்” மூலம் பிஎஸ்எப் அமைப்புக்கு டிரோன்கள், ரேடார்கள் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் கால்நடை கடத்தலை தடுக்க போலீசார், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பிஎஸ்எப் அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு பிரச்னையை தற்காலிகமாக கட்டுப்படுத்துவது மட்டுமே பாதுகாப்பு அல்ல என்றும், அந்த பிரச்னையை வேரோடு ஒழிப்பதே உண்மையான பாதுகாப்பு அணுகுமுறை என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். ஊடுருவலை தடுக்க பிஎஸ்எப் அதே அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
