பாரிஸ்: கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற கொடூர விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Airbus மற்றும் Air France நிறுவனங்களுக்கு ரூ.720 கோடிக்கும் அதிகமான அபராதம் விதித்து பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற ஏர் பஸ் ஏ330 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்தனர். உலகை உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக பல ஆண்டுகளாக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன.
விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் பனிப்படிவால் செயலிழந்ததே விபத்துக்குக் காரணம் என ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் ஆரம்பத்தில் விளக்கம் அளித்திருந்தன. இந்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு கீழ்நீதிமன்றம் இரு நிறுவனங்களுக்கும் சாதகமான தீர்ப்பை வழங்கியது.
ஆனால், அந்த தீர்ப்பை எதிர்த்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை மறுவிசாரணை செய்த நீதிபதிகள், தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய தவறியது மற்றும் விமானிகளுக்கான போதிய பயிற்சி இல்லாமையே இந்த விபத்திற்கான முக்கிய காரணங்கள் என தெரிவித்தனர்.
மேலும், நிறுவனங்களின் கவனக்குறைவால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2.51 கோடி வழங்க வேண்டும் என்றும், மொத்தமாக ரூ.720 கோடிக்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸின் உயர்மட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
