புதுடில்லி: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா அளித்த பேட்டியில், சமீபத்தில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து சில இடங்களில் மக்கள் அச்சத்துடன் அதிகளவில் பெட்ரோல், டீசல் வாங்கியதாக கூறினார்.
ஆனால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், தேவையான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும், சுத்திகரிப்பு ஆலைகள் உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், அனைத்து நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன என்றும் கூறினார்.
இதனால், மக்கள் தேவையற்ற பீதியின்றி அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், குழாய்வழி உள்கட்டமைப்பு உள்ள கல்வி நிறுவனங்கள், விடுதிகள், அங்கன்வாடி சமையலறைகள் போன்றவற்றுக்கு 5 நாட்களுக்குள் பிஎன்ஜி இணைப்புகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
