வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த போரின் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட இருந்த ராணுவ தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்க காரணம் யார் என்ற விவகாரத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவா அல்லது டிரம்பா என்ற கேள்விகள் எழுந்து வந்தன. இதற்கிடையில், இந்த மோதல் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சில தரப்புகள், இஸ்ரேல் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு தயாராக இருந்ததாகவும், அதுவே அமெரிக்காவையும் போரில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் மெம்பீஸ் நகரில் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் டிரம்ப் பேசுகையில், “ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் தான். மத்திய கிழக்கில் உள்ள பிரச்னையை உடனே தீர்க்கலாமா அல்லது பின்னுக்கு தள்ளலாமா என நான் கேட்டபோது, தாக்குதல் நடத்த வேண்டும் என்றே அவர் வலியுறுத்தினார்” என கூறினார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சில சமயங்களில் இது பெரிய பிராந்திய மோதலைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்ததாகவும் டிரம்ப் முன்பாக விளக்கம் அளித்திருந்தார்.
