பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்றுச் சாதனை: வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 114 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் இந்தச் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்ற 97 வீரர்கள் மொத்தம் 114 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 24 வீரர்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் அடுத்த இடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் நிகழ்த்திய சாதனை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டுள்ளார். 114 பதக்கங்களை வென்று, இந்தப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சாதனை ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், இந்திய அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரரின் மன உறுதியையும் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு வீரரும் இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பங்களித்ததுடன், தங்களது வெற்றிகள் மூலம் எண்ணற்ற இந்தியர்களுக்கு ஊக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
