இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றான ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தாக்குதல்களில் சேதமடைந்த இந்த தளத்தில், பழுது பார்க்கும் பணிகளுடன் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. செயற்கைக்கோள் படங்களின் மூலம் இந்த மாற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தற்போது, அந்த விமானப்படை தளத்தில் போர் விமானங்களை பாதுகாப்பாக வைத்திருக்க பிரத்யேக ஹேங்கர்கள் அமைக்கப்படுகின்றன. இவை வெறும் இயற்கை காரணிகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டுமல்லாமல், வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் பார்வையில் இருந்து விமானங்களை மறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்களை திறந்த வெளியில் நிறுத்தும் போது செயற்கைக்கோள் மூலம் எளிதில் கண்காணிக்கப்படலாம் என்பதால், இத்தகைய கட்டுமானங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், சமீபத்திய உலக மோதல்களில் இருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், ட்ரோன் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கத்திலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது.
