நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான தவறான செயல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்நிறுவனத்தில் பணிபுரியும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தொல்லை ஏற்பட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் விசாரணை தொடங்கினர்.
விசாரணையின் போது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் முக்கிய ஆதாரமாக அமைந்தது. அதில் ‘கோபால்’ என குறிப்பிடப்பட்டிருந்த நபர் வேறுபட்ட தோற்றத்தில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் தனது பெயரை மாற்றியதாகவும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிறுவனத்தில் சில குழுத் தலைவர்கள் சேர்ந்து பெண்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மதமாற்றத்திற்கு மறுத்தவர்களுக்கு அழுத்தம் மற்றும் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மனிதவள பிரிவு அதிகாரி ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
