சென்னை: தேர்தல் இறுதி கட்டத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் Seeman வீடியோ வெளியிட்டு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வீடியோவில், “கட்சியை பயன்படுத்திக் கொள்பவர்கள் மற்றும் கட்சிக்காக உழைப்பவர்கள் என இரண்டு வகை மனிதர்கள் உள்ளனர். கட்சிக்காக உழைப்பவர்களையே நான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “தகுதியற்றவர்களை ஒருபோதும் நிறுத்தவில்லை. கடைசி நேரம் வரை உறுதியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பண அரசியலை கடுமையாக விமர்சித்த அவர், “வாக்குக்கு பணம் வழங்குவது ஜனநாயகத்தை கொல்லும் செயல். கேடுகெட்ட பணநாயகம் பல் இளித்து சிரிக்கிறது; அதற்கு நாம் உடன்பட முடியாது” என்று கூறினார்.
பணம் அரசியலாக மாறும்போது மக்கள் சேவை குறைந்து, இலாப நோக்கம் மேலோங்கும் என்றும், சாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியல் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“எல்லா சோதனைகளையும் கடந்து சாதிப்பதே உண்மையான வெற்றி. அதற்கான ஒரே வழி கடுமையான உழைப்பு தான்” என்று கூறிய Seeman, ஆதரவாளர்களை நம்பிக்கையுடன் களத்தில் நிற்க அழைத்தார்.
இறுதியாக, “நம் இலக்கு இனத்தின் முன்னேற்றம்; ஒன்றுபட்டு வெற்றியை நோக்கி செல்வோம்” என அவர் கேட்டுக்கொண்டார்.
