புதுடெல்லி: நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட ‘நீட்’ (NEET) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த முறை வினாத்தாள் கசிவு ஏற்படாது என்ற நம்பிக்கையை அந்த முறைகேட்டை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ராஜஸ்தான் ஆசிரியர் சசிகாந்த் சுதார் தெரிவித்துள்ளார்.
மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து, தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வை ரத்து செய்து மறுதேர்வை அறிவித்தது.
மறுதேர்வை பாதுகாப்பாக நடத்த மத்திய அரசு பல்வேறு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் இணைய வசதி இல்லாத பாதுகாப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான சந்தேகத்தை முதலில் ராஜஸ்தானின் சிக்கார் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மைய வேதியியல் ஆசிரியர் சசிகாந்த் சுதார் போலீசிலும், தேசிய தேர்வு முகமைக்கும் தெரிவித்திருந்தார். அதன் பின்னரே வினாத்தாள் கசிவு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சசிகாந்த் சுதார் கூறுகையில், “மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சகம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிய வாய்ப்பில்லை. இருப்பினும், எதிர்காலத்திலும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு அவசியம்” என்றார்.
இதற்கிடையில், மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், மறுதேர்வு எந்தவித குழப்பமும் இல்லாமல் நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இன்னும் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
