சென்னை: தேர்தலுக்கு பிறகு கூட்டணியை மாற்றுவதை எளிதில் நியாயப்படுத்த முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக திமுக கூட்டணியுடன் இணைந்து பயணித்து வருகிறோம். அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஓட்டுகளும், உழைப்பும் சேர்ந்து தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும், “மு.க. ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே மக்களிடம் ஓட்டு கேட்டோம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இது தவெகவுக்கு எதிரான ஓட்டுதான் என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம்” என்றார்.
அதிமுகவுக்கு எதிரான மனநிலை இருந்தாலும், அதே நேரத்தில் தவெகவுக்கும் எதிரான ஓட்டாகவே இதை பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இப்படிப்பட்ட சூழலில் திடீரென கூட்டணியை மாற்றுவது குறித்து எங்களுக்குள் ஒரு நெருடல் இருக்கிறது. அதனால் தான் உடனடியாக முடிவு எடுக்காமல், கட்சிக்குள் விரிவான ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், “இதற்காக எடுத்துக் கொண்ட கால அவகாசம் பெரிய தாமதம் அல்ல. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாங்கள் மிக அவசரமாகவே முடிவு எடுத்துள்ளோம்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் என்ற சூழ்நிலையை உருவாக்கி தமிழக வெற்றிக் கழகத்தை சிலர் அவசரப்படுத்துகிறார்கள். இடதுசாரி கட்சிகள் முடிவை அறிவித்துவிட்ட நிலையில், நீங்கள் ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என கேட்கிறார்கள்” என்றார்.
“ஆனால், ஒரு கட்சியை நடத்தும்போது அதன் உள்ளே பல்வேறு கருத்துக்கள் இருக்கும். அவை அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டியவை. அதை புரிந்து கொள்ளாமல் உடனே முடிவு அறிவிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
