திலக் வர்மா அதிரடி: பஞ்சாபை வீழ்த்திய மும்பை அணி
தர்மசாலா: Mumbai Indians மற்றும் Punjab Kings அணிகள் மோதிய லீக் போட்டியில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் மும்பை அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் நல்ல தொடக்கம் கொடுத்தனர். பவர் பிளே ஓவர்களில் சிக்சர் ஏதும் அடிக்கப்படாத நிலையில், பின்னர் கொனாலி முதல் சிக்சரை பதிவு செய்தார்.
பிரப்சிம்ரன் சிங் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் 12வது ஓவரில் ஷர்துல் தாகூர் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை மாற்றினார். பிரப்சிம்ரன் 57 ரன்களிலும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களிலும் அவுட்டாகினர்.
11 ஓவர்களில் 100/1 என்ற வலுவான நிலையில் இருந்த பஞ்சாப் அணி, 17 ஓவர்களில் 147/7 என சரிந்தது. இறுதியில் ஓமர்சாய் 38 ரன்கள் எடுத்ததன் உதவியுடன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 200/8 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
201 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரிக்கிள்டன் தொடக்கம் கொடுத்தனர். ரிக்கிள்டன் 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ரோகித் சர்மா 25 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடினார். அவர் அடித்த ஒரு சிக்சர் 106 மீட்டர் தூரம் பறந்து மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வில் ஜாக்ஸ் மற்றும் திலக் வர்மா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். 4 மற்றும் 5வது பந்துகளில் திலக் வர்மா தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் அடித்ததால், மும்பை அணி 19.5 ஓவர்களில் 205/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திலக் வர்மா 75 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
