மேலும், வியட்நாம் நாட்டின் கொடியுடன் கூடிய ‘என்.வி., ஷைன் எனும் கப்பல், 46,427 டன் எல்.பி.ஜி., .
மஸ்கட்: ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘ஹாஜி அலி’ என்ற சரக்கு கப்பல், நேற்று அதிகாலை ஓமனின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள லிமா அருகே பயணித்து கொண்டிருந்தது. இந்த கப்பல் சோமாலியாவில் இருந்து ஷார்ஜா நோக்கி கால்நடைகளை ஏற்றி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, ட்ரோன் அல்லது ஏவுகணை என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத வெடிபொருளால் கப்பல் தாக்கப்பட்டது. இதனால் கப்பலில் தீப்பற்றி, பின்னர் கட்டுப்பாட்டை இழந்து ஓமன் கடற்பகுதியில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
கப்பலில் இருந்த ஒரு மாலுமி உட்பட 14 இந்திய பணியாளர்களும் ஓமன் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பல் உரிமையாளர் சுல்தான் அகமது, மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது.
“வணிக கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் பணியாற்றும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவை நோக்கி வந்த இரண்டு எல்.பி.ஜி. டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ஷல் தீவுகள் கொடியுடன் பயணித்த ‘சிமி’ கப்பல் 19,965 டன் எல்.பி.ஜி. ஏற்றியபடி கடந்த 13ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. இந்த கப்பல் விரைவில் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வியட்நாம் நாட்டின் கொடியுடன் பயணிக்கும் ‘என்.வி. ஷைன்’ கப்பல் 46,427 டன் எல்.பி.ஜி. சரக்குகளுடன் வரும் 18ஆம் தேதி நியூ மங்களூரை வந்தடையும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு கப்பல்களிலும் உள்ள சரக்குகள் Indian Oil Corporation நிறுவனத்துக்குச் சொந்தமானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
