மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், மலைப்பகுதியை மறு அளவீடு செய்ய அரசு தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் வழங்கியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமணக் கோயில்கள் மற்றும் தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும் என்றும், முழு மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் மலைப்பகுதியை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எஸ். ஸ்ரீமதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அளவீட்டில் சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பதால் மறு அளவீடு செய்ய அவகாசம் தேவை என அரசு தரப்பு தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரிவி கவுன்சில் உத்தரவுக்குப் பிறகு மலையில் ஏதேனும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவை குறித்த விவரங்களையும் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
