திமுக – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை: டி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டம்
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக தரப்பு திமுகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்கிறது என்ற தகவல்களும் வெளியாகின.
மறுபுறம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியாக செயற்குழு மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில், “அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா?” என்ற ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ். இளங்கோவன், “இது சாத்தியமில்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் பிரதான எதிரிகளாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்று இரவுக்குள் தங்களது இறுதி முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
