தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, தவெக ஆட்சி அமைப்பதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாடுவது சரியா என்ற கேள்வியை இயக்குநர் சேரன் எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை கடந்த புதன்கிழமை சந்தித்தார்.
அப்போது, ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு பட்டியலை வழங்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறுநாளும் விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில், 118 எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆளுநர் தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த சூழலில், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிகவின் ஆதரவையும் தவெக நாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “108 தொகுதிகளில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக, தேர்தல் களத்தில் பிரதான எதிரியாக கூறிய திமுகவின் கூட்டணிக் கட்சிகளை தற்போது இணைத்துக்கொள்வது சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “காங்கிரஸ் வென்ற 5 தொகுதிகளிலும் திமுகவின் வாக்குகள் முக்கிய காரணமாக இருந்ததே என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் திமுக எம்எல்ஏக்களே கட்சித் தாவலில் வந்தாலும் அவர்களையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படுமா?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் திமுக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தவெகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை யாரும் சிந்திக்கவில்லை என்றும், தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் எங்கோ சறுக்கலாக தெரிகிறது என்றும் சேரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “108 எம்எல்ஏக்களுடன் தவெக ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் மறுதேர்தலை சந்திக்க முடிவு எடுக்கலாம். அதுவே சரியான ஜனநாயக நிலைப்பாடாக இருக்கும். தேர்தலுக்கு முன்பு கூட்டணிக்கு வர மறுத்த கட்சிகளை தற்போது இணைத்துக்கொள்வது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாக அமையும் அல்லவா?” என இயக்குநர் சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
