தவெக ஆட்சி 6 மாதங்கள்கூட நீடிக்காது: ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். தவெக ஆட்சி ஆறு மாதங்கள்கூட நீடிக்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமின்றி, அக்கட்சிக்கு வாக்களித்தவர்களும் தற்போது புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடு, பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிங்கப்பெண் படை’யைப் பாதுகாக்க மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளும் போதைப்பொருள் நடமாட்டமும் முக்கியப் பிரச்சினைகளாக இருப்பதாக அவர் கூறினார்.
தவெக தரப்பினர் பொதுக்கூட்டங்களில் திமுகவை ‘தீய சக்தி’ என்று விமர்சிப்பதற்குப் பதிலளித்த ஸ்டாலின், உண்மையில் யார் தீய சக்தி என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடக்கத்தில் ஆறு மாதங்கள் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் தற்போதைய ஆட்சி ஆறு மாதங்கள்கூட நீடிக்க முடியாத நிலையில் சென்று கொண்டிருப்பதாகத் தாம் கருதுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
