தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தல் முடிவு மற்றும் கட்சியின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெக கூட்டணியில் இணைந்து ஆதரவு வழங்கியது. மேலும், அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. இந்த கூட்டணி மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்ததைத் தொடர்ந்து திமுக முன்வைத்த விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பதிலளித்து வந்த நிலையில், அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
