சட்டப்பேரவையில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துப் பேசிய விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தின் இயல்பான அம்சங்கள் என்றும், சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதல்வர் பேசியது தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதற்கு பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என விமர்சித்ததும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் விவாதங்களில் இரு தரப்பினரும் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அரசியலில் நிலைமைகள் மாறக்கூடியவை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டுமெனவும் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
