வேலூர்: தமிழக அரசின் முழுமையான ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்தை யாராலும் செயல்படுத்த முடியாது என்று முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அண்மையில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “தமிழக அரசின் முழு ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை எந்தக் கொம்பனாலும் கட்ட முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தமிழக அரசு உறுதியாக முறியடிக்கும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளே தமிழகத்தின் நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக உள்ளன. அந்தத் தீர்ப்புகளை முழுமையாக படித்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள். முழுமையான தகவல்கள் இல்லாமல் கருத்து தெரிவிப்பவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்றார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், துரைமுருகனின் இந்தக் கருத்து மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
