சென்னையில், இனி டில்லி மற்றும் தமிழகம் என்ற பிரிவை முன்வைத்து மக்களை ஏமாற்ற முடியாது என அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தினகரன், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயலையும் சந்தித்தார்.
அந்த சந்திப்பு குறித்து அவர் அளித்த பேட்டியில், பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி எவ்வாறு ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெற்றதோ, அதேபோல் தமிழக சட்டசபை தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறினார்.
அமித் ஷா அடிக்கடி சென்னை வர இயலாததால், டில்லி சென்று ஆலோசனை நடத்துவதாகவும், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமியும் அமித் ஷாவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தொகுதி பங்கீடு குறித்து தாம் அமித் ஷாவிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் தினகரன் கூறினார்.
மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறி வருவது தவறானது என்றும், கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி, மகளிர் உரிமைத் தொகைக்கு மாற்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கிறது என்றும், “இந்த தேர்தல் டில்லி மற்றும் தி.மு.க. இடையேயானது” என முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறானது என்றும் தினகரன் விமர்சித்தார்.
இனிமேல் டில்லி–தமிழகம் என்ற பிரிவை பேசிக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
