சென்னையில், திமுக அரசை விமர்சித்ததற்காக சமூக வலைதளங்களில் இழிவான விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை எதிர்கொள்வதாக பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், திமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்காக திமுக ஆதரவாளர்கள் தன்னை வசைபாடியதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலால் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தாலும், கருணாநிதியின் இலக்கிய வரலாறு தொடர்பான நூலை மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அதற்குப் பின்னரும் சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கும் பதிவுகள் தொடர்ந்து வருவதாகவும், அவை தனது நற்பெயரையும் பாதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் தன்னை மன ரீதியாக பாதித்துள்ளதாகவும், பல நாட்கள் மனவேதனையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை ஒரு தாய் என்றும், குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர் என்றும் குறிப்பிட்ட அவர், திமுக அரசை விமர்சித்ததற்காக தன்னை இழிவாக குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய அரசியல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து தன்னால் திறந்தவெளியில் கருத்து தெரிவிக்க முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசை விமர்சித்தாலே கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது என கூறியுள்ளார்.
இந்த சூழலில், சமூக வலைதளங்களில் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
