ஜூன் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.95 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.9 சதவீதம் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்நாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 6.5 சதவீதம் உயர்ந்து ரூ.1.35 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல், இறக்குமதி வர்த்தகத்தின் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 34.6 சதவீதம் அதிகரித்து ரூ.60,038 கோடியாக உயர்ந்துள்ளது.
மாநில வாரியாக பார்க்கும்போது, உத்தரப் பிரதேசத்தில் ஜிஎஸ்டி வசூல் 19 சதவீதம் அதிகரித்து ரூ.9,176 கோடியாக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 9 சதவீதம் உயர்ந்து ரூ.30,714 கோடி வசூலாகியுள்ளது.
மேலும், அசாமில் 17 சதவீதம், பஞ்சாப்பில் 14 சதவீதம், குஜராத்தில் 12 சதவீதம், கர்நாடகாவில் 10 சதவீதம் மற்றும் டெல்லியில் 8 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி பதிவாகியுள்ளது.
