சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து: திமுக – தவெக மீது பாஜ கடும் கண்டனம்
சென்னை: சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் முஸ்தபா தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதனத்தை ஒழிப்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம் என்று தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் பேசுவது தான் தவெக முன்வைக்கும் மாற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கும்போது அதை கண்டுகொள்ளாமல் இருப்பது அனைவருக்குமான அரசு என்ற கொள்கைக்கு ஏற்றதல்ல. மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டசபையில் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய சில நாட்களிலேயே, தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா அந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது சனாதன தர்மத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பை காட்டுகிறது. திமுகவும் தவெகவும் மிக குறுகிய அரசியல் வரலாற்றிலேயே மக்கள் முன்னிலையில் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்துள்ளன” என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மேலும், “சனாதன இந்து தர்மத்தின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் திமுகவை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை அந்த கட்சி மறந்து விட்டது. அதையே தவெகவும் விரைவில் உணரும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மக்கள் பிரதிநிதி ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசுவது மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். சனாதன தர்மத்தை விமர்சிக்கும் முஸ்தபா, இஸ்லாமிய மார்க்கத்தையும் விமர்சிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி மற்றும் முஸ்தபா பேசிய கருத்துகளை முதல்வர் விஜய் கண்டிக்காதது சரியல்ல என்றும், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறையை விமர்சிப்பவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
