அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தாமதம்: 3,000 கோப்புகள் நிலுவை
சென்னை: விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படாததால், சுமார் 3,000 அரசு கோப்புகள் கையெழுத்துக்காக நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இதில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா உள்ளிட்ட ஒன்பது பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆதரவு தெரிவித்த அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் தலைமையிலான அணிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த அரசியல் ஆலோசனைகள் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறை ஒதுக்கீடு நடவடிக்கைகள் தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் மே 6ஆம் தேதி அவை நீக்கப்பட்டன. அந்த காலகட்டத்திலும், புதிய அரசு பதவியேற்ற பின்னரும், பல்வேறு துறைகளில் தொடர்புடைய சுமார் 3,000 கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோப்புகளில் அமைச்சர்கள் கையெழுத்திட்ட பிறகே அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட செயல்பாடுகள் முன்னேற முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த 10 நாட்களில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல், மானிய கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற வேண்டியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர்களுக்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்பட்டு அரசு பணிகள் தடையின்றி நடைபெற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு வட்டாரங்களில் எழுந்துள்ளது.
