சென்னை: விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு தினமும் நேரத்திற்கு தலைமைச் செயலகம் வந்து பணிகளை கவனித்து வருவது அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்றார். காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் காலை 8:48 மணிக்கே நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்திருந்தார்.
அடுத்த நாள் காலை 9:30 மணிக்கு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8:45 மணிக்கே தலைமைச் செயலகம் வந்தார்.
மேலும், மே 12ஆம் தேதி நடைபெற்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலுக்காக காலை 8:55 மணிக்கே சட்டசபை வளாகத்திற்கு விஜய் வந்திருந்தார்.
அதேபோல், மே 13ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க காலை 9 மணிக்கே தலைமைச் செயலக வளாகத்தை வந்தடைந்தார். சபை தொடங்குவதற்கு முன்பாக காலை 9:22 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 9:55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய், மாலை 4 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.
தினமும் தலைமைச் செயலகத்திற்கு வரும் போது, மதிய உணவையும் கையோடு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அரசு ஊழியரைப் போல நேரத்திற்கு அலுவலகம் வருவது மற்றும் மதிய உணவை அங்கேயே உட்கொள்வது போன்ற செயல்கள் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
