கோவை சிறுமி கொலை சம்பவம்: குடும்பத்தினருக்கு போனில் ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்
கோவை: கோவையில் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட உக்கம்பட்டி காடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சிறுமியின் இல்லத்திற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது சிறுமியின் தந்தைக்கு வீடு கட்ட நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோரும் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் முதல்வர் விஜய் மொபைல் தொலைபேசி மூலம் சிறுமியின் தந்தையிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் இணைந்து சிறுமியின் தந்தையிடம் வழங்கினர்.
ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்திருந்த முதல்வர் விஜய், கோவையில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
