வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் சத்யாபுரம் பகுதியில் ராமர் வெங்கடேச பெருமாள் மற்றும் மாரியம்மன் கோவில் கட்டுமானத்தைச் சுற்றி இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.
இந்துப் பைரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், தங்கள் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழிபாட்டில் உள்ள கோவிலை புதுப்பித்து கட்ட முயற்சிக்கும்போது, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் சிலர் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கோவில் பணிகளை தடுக்க முயற்சிப்பதோடு, மிரட்டல் விடுப்பதாகவும், அடிக்கடி போலீசில் புகார் அளித்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் பைரா சமூகத்தினர் அளித்த மனுவில், தாங்கள் மதம் மாறியதன் காரணமாக சமூக ரீதியாக புறக்கணிக்கப்படுவதாகவும், கோவில் பணிகளில் பங்கேற்காததை காரணம் காட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாகவும், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இது மனித உரிமை மீறலாகும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இரு தரப்பினரின் மனுக்களையும் பெற்றுக்கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
