திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் ஏராளமானோர் பால்குடங்கள் சுமந்தும், வேல் ஏந்தியும் திருப்பரங்குன்றம் மலை கிரிவலத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி கடந்த 40 ஆண்டுகளாக ஹிந்து முன்னணி போராடி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இதனால் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய தமிழக அரசும் நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தாமல், மேல்முறையீடு செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் அரசும் சட்டத்தை மதிக்கவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார்.
மேலும், தேர்தல் காலத்தில் இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளையும் அவர் கேள்விக்குட்படுத்தினார். சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது என்றும், அறநிலையத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
