“ஈழத்தமிழர்களுக்கு சீமான் உதவியே செய்யவில்லை” – இலங்கை எம்.பி. அர்ஜுனா விமர்சனம்
சென்னை: இலங்கையில் இருந்து வந்த தமிழர்களை சந்தித்து ஒரு வேளை உணவு கூட வழங்கியதில்லை. ஆனால் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றவர் சீமான் என்று இலங்கை எம்.பி. Ramanathan Archchuna குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள ராமநாதன் அர்ஜுனா, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “முதல்வர் Vijayயை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் முதல்வராக பொறுப்பேற்ற தருணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இலங்கை பாராளுமன்றத்தில் இருந்ததால் அதை பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.
மேலும், “தமிழக மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். எங்கள் இனம் அழியும் போது திமுக மற்றும் அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “Seeman வாக்கு வாங்குவதற்காக மட்டுமே ஈழத்தமிழர் பிரச்னையை பேசியார். ஆனால் விஜய் எங்கள் மக்களின் வலியை தேர்தல் பிரசாரத்தில் எங்கும் பயன்படுத்தவில்லை. தமிழக மக்களிடம் அதை கூறி அரசியல் செய்யவும் இல்லை” என்றார்.
அதோடு, “யாழ்ப்பாணத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் வாழும் எங்கள் மக்களை சந்தித்து ஒரு வேளை உணவு கூட சீமான் வழங்கியதாக வரலாறு இல்லை. ஆனால் அந்த மக்களிடமிருந்து தனது அரசியலுக்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். பெற்றும் எதுவும் செய்யவில்லை என்பதுதான் என் முக்கிய குற்றச்சாட்டு” என்று கூறினார்.
மேலும், “இவர் இப்படியே அரசியல் செய்து கொண்டே சென்றால், அவரது மகன் அமெரிக்காவில் படிக்கலாம். ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் நான் சீமானை அரசியலில் எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர்மீது எந்த கோபமும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “சீமான் கூறும் ஆமைக்கறி கதை உள்ளிட்டவை அனைத்தும் பொய்யானவை” என்றும் இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனா கூறினார்.
