வாஷிங்டன்: ஈரான் தொடர்பான போருக்கு முடிவுகாலம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் துல்லியமாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத் பேசியதாவது: வளைகுடா பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பதற்றத்தை அதிகரிப்பதை ஈரான் தவிர்க்க வேண்டும். சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய திறன் ஈரானுக்கு உள்ளது. இனிமேலும் அண்டை நாடுகள் அல்லது அரபு நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடாது.
ஈரான் தொடர்பான போரை முடிவுக்கு கொண்டு வர எந்த காலக்கெடும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் துல்லியமானவை என்றும், அதன் முக்கிய நோக்கங்கள் மாறவில்லை என்றும் அவர் கூறினார். ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களை அழித்தல், அவற்றை மீண்டும் உருவாக்குவதைத் தடுப்பது, கடற்படை திறன்களை பலவீனப்படுத்துவது மற்றும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் தடுக்குவது ஆகியவை அமெரிக்காவின் முக்கிய இலக்குகளாக உள்ளன.
ஈரான் பல ஆண்டுகளாக அரசு வளங்களை மக்களின் நலனுக்கு பயன்படுத்தாமல், ஏவுகணைகள் மற்றும் டிரோன் போன்ற ராணுவ வசதிகளுக்காக செலவழித்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். உலகில் வேறு எந்த ராணுவமும் செய்ய முடியாத அளவுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதன் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், போர் அமெரிக்காவின் நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவுக்கு வரும் என்றும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஈரானின் 11 நீர்மூழ்கிக் கப்பல்கள் காணாமல் போயுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பெரிய ராணுவ தாக்குதல்கள் நடைபெறும் என்றும் கூறினார்.
மோதலுக்கான செலவுகளை சமாளிக்க, பென்டகன் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான கூடுதல் நிதியை கோரியுள்ளது. இந்த தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
