லண்டன்: கத்தாரில் உள்ள எண்ணெய் மற்றும் எல்பிஜி வளங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் காஸ் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் பதற்றமான சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக, அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன், சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கட்டமைப்புகளும் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களின் தாக்கமாக, பிரிட்டனில் காஸ் விலை 23 சதவீதம் உயர்ந்து 171 பவுண்ட் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஐரோப்பா முழுவதும் காஸ் விலை அதிகரித்துள்ளது. மோதல் ஆரம்பிக்கும் முன் இருந்த விலையை விட தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரம் காட்டுகிறது.
இதனிடையே, தங்களது எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
