புதுடில்லி: பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுதங்களை பரப்பிய வரலாறு கொண்ட நாடு என மத்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான அறிக்கை, அந்நாட்டு உளவுத்துறையால் அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட் சமர்ப்பித்தார். இதில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைப் போலவே பாகிஸ்தானாலும் அமெரிக்காவுக்கு அணுசக்தி சார்ந்த அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் அதிநவீன ஏவுகணை அமைப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பாகிஸ்தானின் செயல்பாடுகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன என்றார். குறிப்பாக, ரகசிய அணு ஆயுத பரப்பலில் அந்த நாட்டுக்கு நீண்ட வரலாறு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ரகசிய நடவடிக்கைகள் உலகளவில் பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதை இந்த அறிக்கை வெளிக்காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் அவர் தெரிவித்தார்.
