காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஆப்கானிஸ்தானுடன் நேரடி போர் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், கந்தஹார், பக்டியா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படை இரவு முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ராணுவ தலைமையகங்கள், ஆயுத கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
