“ஆத்மா தண்டனை கொடுக்கிறது” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்
கோவை: செங்கோட்டையன், முன்னாள் தலைவர்களின் படங்களை புறக்கணித்தவர்களின் அரசியல் கனவு சிதறியுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மாற்றத்தை விரும்பியதால் தான் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுக்கு பணம் வழங்காமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார்” என்றார்.
மேலும், “தமிழகம் இந்தியாவிலேயே திருப்புமுனை மாநிலமாக உருவாகும். மக்கள் நலனை பிரதிபலிக்கும் திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றன. 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள், குழந்தைகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன” என்றும் தெரிவித்தார்.
அதேபோல், “ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் நடவடிக்கைகளும் மக்கள் நலனுக்கானவை” என்று கூறினார்.
முதல்வர் விஜயை பாராட்டிய அவர், “தமிழகத்தில் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றை உருவாக்கும் திறன் தற்போதைய முதல்வருக்கு மட்டுமே உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் அரசியல் விமர்சனமாக, “தலைவர்களையும் மக்களையும் மதிக்காதவர்களுக்கே இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. அத்திக்கடவு – அவிநாசி திட்ட விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் தேவையில்லை, என் படம் மட்டும் போதும் என்று நினைத்தவரின் கனவு இன்று சிதறி கிடக்கிறது” என்று தெரிவித்தார்.
“இன்றும் ஜெயலலிதா படம் என் பாக்கெட்டில் இருக்கிறது. அம்மா படம் வேண்டாம், தலைவர் படம் வேண்டாம் என்று நினைத்தவர்களுக்கு அவர்களது ஆத்மா தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
