பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, உக்ரைன் மோதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கும் என்றும், பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிகளிலேயே தீர்வு காண வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், எவியானில் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சமீப காலங்களில் இந்தியா–உக்ரைன் உறவுகள் பல்வேறு துறைகளில் வலுப்பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், போருக்கு முந்தைய காலத்தில் இருந்த வர்த்தக உறவுகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதில் இரு தரப்பும் ஒருமித்த கருத்தை பகிர்ந்ததாகவும் கூறினார்.
இந்தியா அமைதி, நிலைத்தன்மை மற்றும் உரையாடலை ஆதரிக்கும் நாடாக தொடர்ந்து செயல்படும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஜி7 தலைவர்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
