வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட பி-52 (B-52) ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. பின்னர் விமானத்தில் தீப்பற்றியதால் சம்பவ இடம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும், இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த விமானப் பணியாளர்களின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தின் துணைத் தளபதி ஜேம்ஸ் ஹேய்ஸ் கூறுகையில், “நாம் எட்டு சிறந்த அமெரிக்கர்களை இழந்துவிட்டோம்” என்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
பி-52 ரக விமானம் 1950-களில் இருந்து அமெரிக்க விமானப்படையில் சேவையில் இருக்கும் நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும். சுமார் 8,800 மைல்கள் வரை பறந்து தாக்கும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் பெற்றதாகும்.
