விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி விஜயகுமார், லடாக் ஸ்கவுட்ஸ் பிரிவின் கர்னலாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார்.
40 வயதான விஜயகுமார், கடந்த 2008-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய பாதுகாப்புப் படைத் தேர்வில் வெற்றி பெற்று ராணுவத்தில் இணைந்தார். பின்னர் லடாக் யூனியன் பிரதேசத்தில் பொறுப்பு அதிகாரியாக பணியைத் தொடங்கினார்.
அதன்பிறகு மேஜராக பதவி உயர்வு பெற்று ஹைதராபாத், ராஜஸ்தான், வெலிங்டன் உள்ளிட்ட பல்வேறு ராணுவப் பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2016-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் தேர்வான அவர், லெப்டினன்ட் கர்னலாக சூடானில் பணியாற்றினார். தற்போது பதவி உயர்வு பெற்று லடாக் ஸ்கவுட்ஸ் பிரிவின் கர்னலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முந்தைய கர்னல் ரஞ்சன் குமார் தனது பொறுப்புகளை விஜயகுமாரிடம் ஒப்படைத்து, புதிய பொறுப்பை ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
பதவி உயர்வு குறித்து விஜயகுமார் கூறுகையில், “கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்களும் உயரிய பதவிகளை அடைய முடியும் என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு. அரசுப் பள்ளியில் படித்த நான் இந்த நிலையை அடைந்துள்ளேன். அரசுப் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் எந்த உயரத்தையும் அடைய முடியும்” என்று தெரிவித்தார்.
