தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், பாஜகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் அண்ணாமலையுடன் நெருக்கமாக செயல்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரும் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணாமலையின் கட்சி விலகலுக்குப் பிறகான அரசியல் நடவடிக்கைகள் குறித்து தில்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “அண்ணாமலை போன்ற பல இளைஞர்கள் தேசப்பணியில் ஈடுபட பாஜக எப்போதும் ஊக்கமும் ஆதரவும் வழங்கி வந்துள்ளது. அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவரது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது அண்ணாமலை பாஜகவில் இல்லை. சில காரணங்களால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்ததோடு, அதற்கான விளக்கங்களையும் அளித்துள்ளார். பாஜக உறுப்பினராக இல்லாத காரணத்தால், அவரது தனிப்பட்ட கருத்துகளையும் அரசியல் செயல்பாடுகளையும் கட்சி ஆதரிக்காது.
பாஜகவைப் பொறுத்தவரை கட்சியின் சித்தாந்தங்களும் கொள்கைகளுமே முதன்மையானவை. தனிநபர் உணர்வுகளை விட கட்சிக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுபவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். எனவே, கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஒருவரைப் பற்றி இனி பேச வேண்டிய அவசியமில்லை” என்று நிதின் நபின் தெரிவித்தார்.
