இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையையும், இந்தியா-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்திய அவரது பங்களிப்பையும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள எனது நண்பர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவை நீங்கள் மேலும் வலுப்படுத்தியுள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நன்மதிப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். உங்கள் தலைமையின் கீழ், 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், “25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளையும் நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள். நமது நட்பும், இந்தியா-இஸ்ரேல் உறவும் இதுவரை இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுள்ளது” என நெதன்யாகு பாராட்டினார்.
தொடர்ந்து, “உங்களை மீண்டும் நேரில் சந்திக்கவும், எதிர்கால ஆண்டுகளிலும் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுக்கும், உங்கள் தலைமையின் கீழ் முன்னேறும் இந்தியாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்தார்.
