ஹைதராபாத்தில் கோலாகல விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து, ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் பிரசித்தி பெற்ற பாலாப்பூர் விநாயகரின் லட்டு பிரசாதம் ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போனது கவனம் பெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
69 அடி விநாயகர் சிலை கரைப்பு
ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டிருந்த 69 அடி உயர மகா கணபதி சிலையின் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த சிலை நெக்லஸ் ரோடு பகுதியில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாலாப்பூர் விநாயகர் உட்பட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நீர்நிலைகளில் கிரேன்களின் உதவியுடன் கரைக்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார்
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஹைதராபாத் நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை முதல் நள்ளிரவு வரை சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாலாப்பூர் விநாயகர் லட்டு ஏலம்
ஹைதராபாத்தின் பாலாப்பூர் விநாயகர் விழாவில் நடைபெறும் லட்டு ஏலம் ஆண்டுதோறும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விநாயகர் சிலையின் கையில் வைக்கப்படும் இந்த லட்டு, சிலை ஊர்வலத்திற்கு முன்பாக ஏலம் விடப்படுவது வழக்கம்.
முதன்முதலாக நடத்தப்பட்ட லட்டு ஏலத்தில் அது ரூ.450க்கு விற்பனையானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஆண்டுதோறும் அதன் ஏலத் தொகை அதிகரித்து வருகிறது.
ரூ.39 லட்சத்துக்கு ஏலம் எடுத்த பிரணீத் ரெட்டி
இந்த ஆண்டு பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலாப்பூர் விநாயகர் லட்டு பிரசாதம் ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போனது.
சாஹிப் நகர் பகுதியைச் சேர்ந்த பிரணீத் ரெட்டி இந்த லட்டு பிரசாதத்தை ஏலத்தில் எடுத்தார். கடந்த ஆண்டு இந்த லட்டு ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு ஏலத் தொகை மேலும் அதிகரித்துள்ளது.
