போல் வால்ட்டில் முதல் இந்தியப் பதக்கம்: தமிழகத்தின் பரனிகா சாதனை
ஆசிய விளையாட்டு போல் வால்ட் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த பரனிகா இளங்கோவன் படைத்துள்ளார்.
பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தின் பரனிகா இளங்கோவன் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சிந்து ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.
4.15 மீட்டர் உயரத்தை தாண்டிய பரனிகா
போட்டியின் தொடக்கத்தில் 3.85 மீட்டர் மற்றும் 4.00 மீட்டர் உயரங்களை பரனிகா வெற்றிகரமாக தாண்டினார். தொடர்ந்து 4.15 மீட்டர் உயரத்தை தனது இரண்டாவது முயற்சியில் தாண்டினார்.
இதேபோல் கஜகஸ்தானைச் சேர்ந்த போலினா இவனோவாவும் 4.15 மீட்டர் உயரத்தை இரண்டாவது முயற்சியில் தாண்டினார்.
அடுத்ததாக 4.25 மீட்டர் உயரம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பரனிகா மற்றும் போலினா ஆகிய இருவரும் மூன்று முயற்சிகளிலும் அந்த உயரத்தை தாண்ட முடியவில்லை.
வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்து கொண்ட பரனிகா
இதையடுத்து வெண்கலப் பதக்கத்தை தீர்மானிக்க டை பிரேக்கர் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பரனிகாவும் போலினாவும் வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள சம்மதித்ததால், டை பிரேக்கர் நடத்தப்படவில்லை.
இதன் மூலம் பரனிகா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஜப்பானின் மிசாகி 4.55 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், சீனாவின் சுங்கே 4.50 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரனிகா
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த பரனிகா, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 29 வயதான அவர் தனது 6-வது வயதிலேயே தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்ற பரனிகா, கல்லூரியில் சேர்ந்த பின்னர் போல் வால்ட் போட்டிக்கு மாறினார்.
தேசிய சாதனை படைத்த பரனிகா
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளரங்க தடகளப் போட்டியில் 4.22 மீட்டர் உயரம் தாண்டி பரனிகா தேசிய சாதனை படைத்திருந்தார்.
தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, தனது விளையாட்டு வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
