உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் ஹேரி கேன் இரட்டை கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
டல்லாஸில் நடைபெற்ற போட்டியில், ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இங்கிலாந்து அணிக்காக 12-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றிய ஹேரி கேன், 42-வது நிமிடத்திலும் மீண்டும் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
குரோஷியா தரப்பில் மார்ட்டின் பட்டூரினா 36-வது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+5) பீட்டர் மூசா கோல் அடித்ததால், முதல் பாதி 2-2 என்ற சமநிலையுடன் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியில் இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 47-வது நிமிடத்தில் ஜூட் பெலிங்காம் கோல் அடித்ததுடன், 85-வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்ட் மேலும் ஒரு கோல் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குரோஷியா இறுதிவரை போராடினாலும், இங்கிலாந்தின் வலுவான தடுப்பாட்டத்தை உடைத்து மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது.
