டெஹ்ரான்: மேற்காசிய பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் 13 இந்தியக் கொடிகள் ஏந்திய வணிகக் கப்பல்களில் பணியாற்றும் 562 இந்திய மாலுமிகள் கடந்த 107 நாட்களுக்கும் மேலாக சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானை மையமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் கடல் போக்குவரத்திலும் தீவிரமாக பிரதிபலித்துள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் பல வணிகக் கப்பல்கள் பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.
இதனால் 13 இந்தியக் கொடிகள் ஏந்திய கப்பல்களில் பணியாற்றும் 562 இந்திய மாலுமிகள் நடுக்கடலில் நீண்ட நாட்களாக சிக்கியுள்ளனர். வளைகுடா பிராந்தியம் முழுவதையும் கணக்கில் எடுத்தால், சுமார் 18,000 முதல் 23,000 இந்திய மாலுமிகள் இந்த பதற்றமான சூழலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பல கப்பல்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில கப்பல்களில் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ளதால், இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் மாலுமிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
