உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சி’ பிரிவு லீக் போட்டிகளில் பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 7 மற்றும் 45+3வது நிமிடங்களில் வினிசியஸ் ஜூனியர் இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வலுவான முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து 60வது நிமிடத்தில் மத்தேயஸ் குன்ஹா மூன்றாவது கோலை பதிவு செய்து வெற்றியை உறுதி செய்தார். புரூனோ கிமரேஸ் இரண்டு கோல்களுக்கு அசிஸ்ட் வழங்கினார். காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத நெய்மார், 75வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கினார். இந்த வெற்றியுடன் பிரேசில் அணி ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில், மொராக்கோ அணி ஹைட்டியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆரம்பத்தில் பின்தங்கிய மொராக்கோ, கேப்டன் அஷ்ரப் ஹக்கிமி மற்றும் இஸ்மாயில் சைபாரி அடித்த கோல்களின் மூலம் சமநிலையை எட்டியது. பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய சூபியான் ரஹிமி ஒரு கோல் அடித்து, மேலும் ஒரு கோலுக்கு அசிஸ்ட் வழங்கி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மொராக்கோவும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
