நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை சட்டப்படி மீட்கும் முயற்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாயன்மார்களால் பாடப்பெற்ற இக்கோவில், சோழர் காலத்தைச் சேர்ந்த 88 கல்வெட்டுகளை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். மன்னர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் வழங்கிய பல கோவில் நிலங்கள் காலப்போக்கில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை பொதுமக்கள் என சித்தரித்து தவறான பிரசாரம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்படி நடைபெறும் நில மீட்பு நடவடிக்கையை தமிழக அரசு உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்றும், அரசு நடவடிக்கையை தடுக்க முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
