சென்னை: ராமநாதபுரம் தொகுதி லோக்சபா உறுப்பினர் நவாஸ்கனி வருமானத்தை மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி, ராமநாதபுரம் தொகுதியின் லோக்சபா உறுப்பினராக உள்ளார்.
2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட்ட வருமான விவரங்களை ஒப்பிட்டபோது, வருமானத்தை மறைத்ததாக சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதிலளித்த வருமான வரித்துறை, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நவாஸ்கனி மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், நவாஸ்கனியின் வருமான விவரங்களில் பல முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
குடும்பத்தினரின் தொழில் விவரங்கள் என்ன? அவரது வருமானத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? 2019 முதல் 2024 வரை 39.24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக எவ்வாறு கணக்கிடப்பட்டது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் பிரமாணப்பத்திரத்தில் சுமார் 18 கோடி ரூபாய் வரை வித்தியாசம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, நவாஸ்கனியின் வருமான விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு பிறகு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
