புதுக்கோட்டை: தமிழகத்தில் தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்றும், சட்டசபைக்குள் வர முடியும் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சி சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.
மேலும், எங்கள் தலைவர் கூட்டணியை சரியான பாதையில் வழிநடத்தி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக உடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவல்கள் உண்மையல்ல என்றும், அவை சிலர் பரப்பும் வதந்திகள் மட்டுமே என்றும் ரகுபதி கூறினார்.
இது ஒரு அரசியல் கட்சி என்பதால், தி.மு.க. கூட்டணியில் இருந்தால்தான் காங்கிரசுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பதை அந்த கட்சி தலைமை நன்றாக அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால்தான் சட்டசபைக்குள் வர முடியும் என்பது காங்கிரசுக்கு தெரிந்த விஷயம் என்றும் அவர் கூறினார்.
மேலும் நடிகர் விஜயின் கட்சிக்கு காங்கிரஸ் சென்றதாக கூறப்படும் தகவல்களையும் அவர் மறுத்தார்.
அங்கு யாரும் செல்லவில்லை என்றும், அதனால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம் என்றும் ரகுபதி தெரிவித்தார்.
