புதுடில்லி: இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி வழங்கியதாக, ஆறு உக்ரைனியர்கள் மற்றும் ஒரு அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்கள் மிசோரம் வழியாக சட்டவிரோதமாக மியான்மருக்கு சென்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, டில்லி, லக்னோ, கொல்கத்தா விமான நிலையங்களில் சந்தேகத்தின் பேரில் 7 பேரும் பிடிபட்டனர்.
விசாரணையில், அவர்கள் மியான்மரில் உள்ள ஆயுத குழுக்களுக்கு ட்ரோன் இயக்கம், சிக்னல் தடுப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கியதும், ஐரோப்பாவில் இருந்து ட்ரோன்களை கொண்டு வந்து அந்த குழுக்களுக்கு வழங்கியதும் தெரியவந்தது.
சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர்கள், மிசோரம் வழியாக சட்டவிரோதமாக எல்லையை கடந்துள்ளனர் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து, டில்லி சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 11 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், வங்கதேசம், மியான்மர் மற்றும் மிசோரம் பகுதிகளை இணைத்து கிறிஸ்துவ நாடு உருவாக்கும் சதி திட்டம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இதுபோன்ற சதி குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அமெரிக்கரைப் பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இதை என்.ஐ.ஏ. இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
